By சேகர் ராஜதுரை
சென்னை மெரினா பீச் எங்கும்
ஆதாம் - ஏவாள்கள்
ஆதாம் - ஏவாள்கள்
நம் கேமரா சுழல ஆரம்பிக்கிறது.
மாலை 6.30
இருவர் இருவராய் வருகிறார்கள்.
மாலை 7.30
ஒருவர் ஒருவராய் இருக்கிறார்கள்.
ஒரு சிற்றின்பப் பூங்காவாய்
மெரினா !
அதோ, கேமரா கூர்கிறது
அந்த ஹார்பர் பகுதியின் பழைய கூவத்தை தடுத்து நிற்கும்
இரும்பு மதகுகள்
மீசை வளராத ஒரு பையனும்
.... வளராத ஒரு பெண்ணும்
அங்கே போகிறார்கள்.
போய் என்ன ?
இன்னொரு தாஜ்மஹாலுக்கா
அஸ்திவாரம் தோண்டப் போகிறார்கள்?
சில லுங்கி மனிதர்களுக்கு
அதை வேடிக்கை பார்ப்பது
வாடிக்கை.
.
கேமராவைத் திருப்பினால்
அதோ, ஒரு கட்டுமரம் !
மீனவர்களின் கர்ப்பக்கிரகம் !
கர்ப்பக்கிரகத்தில் கிடக்கிறது
கர்ப்பத் தடை மாத்திரைகள் !
அதோ, லைட் ஹவுஸ்
ஆதாம் - ஏவாள்களுக்கு
லைட் ஹவுஸ் பிடிக்காது
இருட்டு இருட்டாய் இருக்கும்
கெஸ்ட் ஹவுஸ் பிடிக்கும் ?
அவர்களுக்கு
ஒளி ஒளியாய் இருக்கும்
லைட் ஹவுஸ் பிடிக்குமா ?
இதோ, இங்கே அண்ணா சமாதி
எம்.ஜி.ஆர் சமாதி
எதையும் தாங்கும் இதயங்கள்
இதையும் தாங்குகின்றன.
சுற்றுலா பயணிகள் நனைகிறார்கள்.
சுற்றுலா வரும் பெண்கள் கவனிக்க:
(முழங்கால் வரை புடவை தூக்கி
கடலில் இறங்காதீர்கள்.
பலபேர் கண்களோடு பிறப்பதே
இதற்காகத்தான்.)
.
அதோ ! நம் கேமரா
சுண்டல்காரப் பையனிடம்
பேட்டி எடுக்கிறது.
"கட்டுமரத்தாண்ட என்ன பார்த்தே ?"
சிரிக்கிறான்.
"அங்கே ஓர் அண்ணன்
குழந்தையாயிட்டாரு !"
காற்று வாங்குவதற்காக
கடற்கரை பக்கம் வந்த
ஷாஜகான் - மும்தாஜ் ஆவிகள்
இவற்றைப் பார்த்துக் கடலில் விழுந்து
இரண்டாம் முறை இறந்ததாகக் கேள்வி !
மாநகராட்சி சோடியம்
விளக்குகளால்
மாநாடே போட்டிருக்கிறது !
ஆதாம் - ஏவாள் எதற்கும்
கலங்குவதில்லை
அவசர மகசூல்தான்
அவர்களுக்கு முக்கியம்.
அலைகள் விளையாடி
ஆனந்தம் நிறைந்த
மெரினா கடற்கரையா ?
காம விளையாட்டுச்
சிற்பங்கள் நிறைந்த
கஜுராஹோ கோயிலா ?
' காதாலாகி... கசிந்துருகி...
கண்ணீர் மல்கி'
என்று எழுதியவன்
எழுதிய விரல்களை
வெட்டிக் கொள்வான்.
.
அதோ நம் கேமராவை
ஜூம் செய்கிறோம் !
ஒரு இரண்டு சக்கர
வாகன மறைவு
பள்ளிக்கூடச் சீருடைதான்
அவர்களுக்கு
ஒரு பெற்றோரின் கனவு
மாளிகைக்கு
மனித வெடிகுண்டாய்
மாறிக் கொண்டிருக்கிறார்கள் !
அவனும் - அவளம்.
எங்கே போகிறது இந்தியா ?
இந்தியர்கள்
அமெரிக்காவுக்கு போகலாம்.
இந்தியக் கலாச்சாரம்
அமெரிக்காவுக்குத் தாவுகிறதா ?
.
அதோ !
ஆள் நடமாட்டமில்லாத அந்தப் பகுதி
ஆதாம் அவளை
'தேவதை' என்கிறான்
ஏவாள் அவனை
'தேவன்' என்கிறாள்
கடைசியில் இருவருமே சாத்தான்கள் !
பாரதி இதைப் பார்த்திருந்தால்
தலைப்பாகையை கழற்றிவிட்டு
தண்டவாளத்தில் படுத்திருப்பான் !
கோவா கடற்கரை
அலைகளில் இருக்கும் கேவலம்
மெரினா கடற்கரை
அலைகளிலும் கலக்கிறதா ?
காதலர் என்ற் பெயரில்
இந்த சதைப் பிராணிகள் சிலது
தற்கொலை செய்து கொள்கின்றன.
மரணம் இவர்களால்
அசிங்கப்பட்டுப் போகிறது.
நம் கேமராவையே நம்மால்
நம்பமுடியவில்லை.
இரண்டு ஆதாம் ஓர் ஏவாள்
ஓர் ஆதாம் இரண்டு ஏவாள்
ஒன்று தெரியுமா ?
கவிஞர்கள் யாருமே இப்போது
கடற்கரைக்குப் போய்
கவிதை எழுதுவதில்லை.
கடற்கரைக்குப் போனால்
கவிதை எங்கே வருகிறது ?
காமம் தான் வருகிறது.
ஆப்பிள் கடித்தால்
அந்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும்
மானமும், நாணமும் வந்ததாம் !
அந்த ஆப்பிள் எங்கே கிடைக்கும்
ஒரு லாரி ஆப்பிள்
அனுப்ப முடியுமா ?
இங்கே மானமும் நாணமும்
நிறைய வேண்டியிருக்கிறது !
இவ்வளவு நேரம்
இந்த நீல இனங்களை
'ஆதாம் ஏவாள்'
என்ற பெயர்களால் குறித்தேன்.
அந்த ஆதாம் - ஏவாள்
என்னை மன்னிப்பார்களா?
Post a Comment