By சேகர் ராஜதுரை
வெயிலின் நிறம் மஞ்சளுக்கு மாறிக்கொண்டிருந்த ஒரு மாலை நேரம்.
திருமதி வாணி ஜெயராம் அவர்களின் வீட்டு வெளிச்சுவர் தனது நெந்றியில் ''மயூரப்பிரியா'' என்று எழுதி வைத்திருக்கிறது.

மயூரம் என்றால் மயில் என்று பொருள்.

தன் வீட்டுக்கு மயில் என்று பெயர் வைத்திருக்கிறதே ஒரு குயில் என்று மனதுக்குள் ரசித்துக் கொள்கிறேன்.

திரு. ஜெயராம் அவர்களும், திருமதி வாணி ஜெயராம் அவர்களும் புன்னகை ராகம் பாடி வரவேற்கிறார்கள்.

அந்த வரவேற்பறையின் அமைதி சுமந்த அழகு, வெயிலோடு அழைத்து வந்த வெப்பத்தையெல்லாம் வெளியே அனுப்பிவிடுகிறது.

விருதுகளை எல்லாம் கண்ணாடிச் சுவர்களுக்குள் அடுக்கி வைத்திருக்கும் அழகு..

தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி வைத்த அமரர் வசந்த்தேசாயின் படத்திற்கு மாலையிட்டு வைத்திருக்கும் மாண்பு...



சுவரில் வழியில் வர்ணக் கலவைகளால் நதியின் திருப்பத்தில் நகரும் ஒரு படகு...

அந்த அறையெங்கும் தூய்மைக்கு அங்குலம் அங்குலமாக அலங்காரம் செய்து வைத்திருக்கும் அந்தப் பாங்கு...

இவையெல்லாம் அந்தக் கோடை வேளையில் மனசுக்குள் மெல்லிய மல்லிகைக் காற்றாய் வீசின.

''உங்களுடைய மூலப்பெயருக்கு ஏற்றவாறே வீட்டை வைத்திருக்கிறீர்கள்?'' என்று வியந்து போகிறேன். (அவருடைய மூலப்பெயர் கலைவாணி)

எனது பொய்யில்லாத புகழ்ச்சியை அவர் தனது புன்னகையால் அங்கீகரித்துக் கொள்கிறார்.

வீட்டைச் சுற்றிக் காட்டுகிறார்.

ஒவ்வோர் அறையிலும் தூய்மையும் அழகும் அரசோச்சுகின்றன.

அங்கே ஆடம்பரத்தின் விசுவருபமில்லை.

அழகு அடக்கமாக இருக்கிறது.

வீட்டை கட்டியதிலும் அதைக் கட்டிக் காப்பதிலும் உள்ள பெருமை தன் கணவரையே சாரும் என்று பெருமை நுரைக்கப் பேசுகிறார்.

திரு. ஜெயராம் அவர்களின் கலை உள்ளத்தை வணங்கி வாழ்த்துகிறேன்.

அவர்கள் வீட்டுச் சமையலறைகூட அப்போதுதான் துடைத்து வைத்த ஆப்பிள் போலப் பளபளப்பாய் இருக்கிறது.

''உங்கள் வீட்டு ஸ்டவைக்கூட யாரோ கொடுத்த அவார்டைப் போலல்லவா அழுக்குப் படாமல் வைத்திருக்கிறீர்கள்! சமைக்கிறீர்களா இல்லையா?'' என்று சந்தேகத்தோடு கேட்டேன்.

சிரிப்பை அடக்க முடியாமல், அன்று சமையல் நடந்தற்கான சாட்சிகளைக் காட்டினார்.

மாடி அறையில் ஒரு பெரிய சுவரோவியம் ஒட்டப்பட்டிருந்தது.

அது, ஒரு பெரிய வனாந்தரத்தை வரைந்து காட்டியிருந்தது.

அதைப் பார்த்த உடனே மனசு அதற்குள் ஓடி விழுந்து உட்கார்ந்து கொண்டது.
தாகூர் சொன்னதைச் சொன்னேன்.

''எந்த ஒரு ஓவியத்தைப் பார்த்தவுடன் நமக்கு அந்த இடத்திற்குப் போய் உட்கார வேண்டும் என்று தோன்றுகிறதோ அதுதான் சிறந்த ஓவியம்.

எனக்கு இப்போது இந்த ஓவியத்தில் இருக்கிற இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு எழுத வேண்டும் போலிருக்கிறது'' என்றேன். ஜெயராம் சிரித்தார்.

மீண்டும் வரவேற்பறைக்கு வந்து அமர்ந்தோம்.

வாணி ஜெயராம் : நேற்று சிலோன் ரேடியோவில் 'ஒரு இந்தியக் கனவு' படத்தில் நீங்கள் எழுதிய 'என் பெயரே எனக்கு மறந்து போன' பாடலைக் கேட்டேன்.

சமீபகாலத்துல ரசிக்கற மாதிரி வந்திருக்கும் பாடல்கள்ல இதுவும் ஒன்று.''

நான் : எனக்கும் ரொம்பப் பிடித்த பாட்டு அது. முதன் முதலில் புத்தகத்துக்குள்ளிலிருந்து எடுத்து இசையமைக்கப்பட்ட முதல் புதுக்கவிதைங்கற அந்தஸ்து அந்தப் பாட்டுக்கு உண்டு. எம்.எஸ்.வி. ரொம்ப நல்லா இசையமைச்சிருக்கார். நீங்களும், எஸ்.பி.பியும் ரொம்ப அழகாப் பாடியிருக்கீங்க.''

வாணி ஜெயராம் : ''உங்களுடைய முதல் பாடலே 'இது ஒரு பொன்மாலைப் பொழுது''தானா?

நான் : ''ஆமாம். நான் எழுதி நீங்கள் பாடின முதல் பாட்டு எது தெரியுமா?''

கொஞ்சநேரம் யோசித்துவிட்டு கணவர் ஜெயராமைப் பார்க்கிறார். அவர் என்னைப் பார்க்கிறார்.

நான் : ''மேகமே மேகமே'' தான்.''

ஆச்சரியத்தால் இருவரின் விழிகளும் குரல்களும் உயர்கின்றன.

வாணி ஜெயராம் : ''அப்படியா! அதற்கு முன்பு உங்கள் பாடலை நான் பாடியதேயில்லையா?''

நான் : ''இல்லை. அப்போதுதான் நான் திரையுலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன். அந்தப் பாடல், எண்ணிக்கையில் எனது எட்டாவது பாடலாகவோ அல்லது ஒன்பதாவது பாடலாகவோ இருக்கக்கூடும். உங்களுக்கு 'கஜல்' தெரியும் என்பதால் அந்தப் பாடலைச் சிங்காரித்துவிட்டீர்கள் என்று இசையமைப்பாளர் திரு. சங்கர் (கணேஷ்) என்னிடத்தில் பாராட்டியிருக்கிறார்.''

வாணி ஜெயராம் : ''நம்மைவிட நமது இசைக்கு ஆயுள் அதிகம். இந்த மாதிரி ஜீவனுள்ள பாடல்கள்தான் காலத்தைக் கடந்து நிற்கும்.

நான் : ''மல்லிகை என் மன்னன் மயங்கும்', 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்', 'மேகமே.. மேகமே' போன்ற பாடல்களைப் பாடிவிட்டு எப்போதாவது நீங்க  கிளப் டான்ஸ் பாட்டுப் பாடுவது மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு மேடம். குத்துவிளக்குல சிகரெட் பற்ற வைக்கற மாதிரி இருக்கு.''

தான் அமர்ந்திருந்த சோஃபா அதிரச் சிரிக்கிறார்.

இன்றைய இசையுலகத்தைப் பற்றிய சின்னச் சின்னச் சர்ச்சைகள், அங்கங்கே சில ஆதங்கங்கள், மற்றவர்களைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயங்கள், 'நெஞ்சமெல்லாம் நீயே' படத்தில் வரும் 'யாரது' என்ற பாடலைப் பற்றிய சிலாகிப்புகள், இவற்றோடு அந்தத் தாயுள்ளத்தின் அன்பையும், உபசரிப்பையும் ஏற்றுக் கொண்டு விடைபெற்றேன்.

திரும்பி வரும்போது அநத்ச் சகோதரியின் குரல் என்கூடவே வந்து கொண்டிருக்கிறது.

- கவிஞர் வைரமுத்து (உடனிருந்து கேட்டு உரையாடலை எழுதியவர் : சுதா முருகேசன்)
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்