சிலரைப் காணும்போது நம்மை யறியாமலேயே ஒரு பாசம் ஏற்படுகிறது. இனம் தெரியாத அந்தப் பாசத்திற்கு இறைவனைத் தவிர வேறு காரணத்தைச் சொல்ல முடிவதில்லை. அதிகம் பழகி இருக்கமாட்டோம். இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேசிகூட இருக்கமாட்டோ ம். ஆனால் அவர்கள் நல்லவர்கள், உயந்தவர்கள் என்ற அபிப்பிராயம் திடுதிடுப்பென்று வந்துவிடுகிறது.
சொல்லப்போனால் அந்த அபிப்பிராயம் சரியாகவும் இருக்கும். சிலரோடு திரும்பத் திரும்பப் பழகினாலும் அவர்களைப் பற்றிய எந்தவித உணர்ச்சியும் நம் மனதில் எழுவதில்லை. நான் மிகவும் அபூர்வமாகச் சந்திப்பவர்களில் ஒருவர் திருமதி வாணி ஜெயராம்.
ரெக்கார்டிங்கிற்குப் போனால்தான் அவரை நான் சந்திப்பேன். ஆனால் பெரும்பாலும் பாடல் ஒலிப்பதிவிற்கு நான் போவதேயில்லை. அன்று அபூர்வமாக ஒரு ஸ்டுடியோவில் நான் வாணிஜெயராமைப் பார்த்தேன். 'இந்தியாவின் எல்லா மொழிகளிலும் பாடியவர்' என்ற சிறப்பைப் பெற்ற வாணி ஜெயராம் மிகவும் அடக்கமானவர். யார் அவரைப் பார்த்தாலும் தங்கள் குடும்பத்தில் அப்படியொருவர் இருக்க வேண்டுமென்று நினைக்கத் தோன்றும். எனக்கு ஏதோ ஒரு நெருங்கிய உறவுப் பெண் நினைவே, வாணிஜெயராமைப் பார்க்கும் போதெல்லாம் வரும். பத்து வருஷங்களுக்கு முன் முதன் முதலில் சந்தித்தபோது பளிச்சென்று அந்த எண்ணம் உண்டாயிற்று. இதைப் பூர்வஜென்ம பந்தம் என்பார்கள்.
வாணி இசை கற்றது, பாடத் தொடங்கியது எல்லாமே வட நாட்டில்தான். எடுத்த எடுப்பிலேயே அவரது இந்திப் பாடல் பிரமாத வெற்றி பெற்றுவிட்டது. அதன் வெற்றியைக் கண்டு சில இந்திக்காரர்களுக்குப் பொறாமைகூட வந்துவிட்டது. வாணிஜெயராமை வைத்து எந்த இசையமைப்பாளர் பாட்டு எடுக்கிறாரோ, அவருடைய இசையமைப்பில் தான் பாடுவதில்லை என்று பிரபல இந்திப் பாடகி ஒருவர் ஸ்டிரைக் செய்தார். ஆனால் என்ன? ஒரிஸாவிலும், வங்காளியிலும், நான்கு திராவிட மொழிகளிலும் வாணியின் கொடிதான் பறந்து கொண்டிருக்கிறது. பானுமதி, வரலட்சுமி, சூரியகுமாரி ஆகியோரின் குரலைப் போல், வாணியின் குரலும் தனித் தன்மைவாய்ந்தது. அந்த ஒலியில் ஒரு குடும்ப சுகம் இருக்கிறது.
சோகப் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தமான குரல் திருமதி டி.எஸ்.பகவதியினுடையது. பகவதி சோகம் பாடினால் நான் அழுதுவிடுவேன்.
அடுத்தது வாணி. முறையான சங்கீதப் பயிற்சியுள்ளதால் எளிய கர்நாடகத்தில் வாணியின் குரல் ஒலிக்கும் போது, அதன் சுகமே அலாதி.
''ஏழு ஸ்வரங்களுக்குள்'' பாடலை எங்கே கேட்டாலும் நான் மெய்மறந்து நின்றுவிடுவேன்.
வாணிக்குப் புத்தகம் படிப்பதில் ஆசை அதிகம். அதிலும் கவிதைகளில் ஈடுபாடு அதிகம். அதனால் எந்தப் பாடலைப் பாடினாலும் உணர்ந்து பாடுகிறார்.
வாணியின் கணவர் ஜெயராம், பண்பாடும் அன்பும் மிக்கவும். சுசீலாவின் கணவரைப் போலவே இவரும் வாணியின் தொழிலில் தலையிடுவதில்லை.
சில பொது ரெக்கார்டுகளுக்குப் பாடும்போது, வாணி, சுசீலா, ஜானகி ஆகியோர் பண விஷயத்தில் பிடிவாதம் பிடிப்பதில்லை.
இசையமைப்பாளர் இரண்டுதரம் பாடினால், உடனே ஒலிப்பதிவுக்குத் தாயாராகிவிடுகிறார் வாணி.
அன்று நான் எழுதிய புத்தகங்களில் நாற்பத்திரண்டு புத்தகங்களை வாணி கேட்டுப் பெற்றுக்கொண்டார். 'தினமும் அதைத்தான் படித்து வருகிறேன்' என்று டெலிபோனில் சொன்னார்.
டெலிபோனில்கூட வாணியின் குரல் தெய்வீகமாக ஒலிக்கும்.
வாணியின் குரலுக்கு, குடும்பப் பாடல்களே கவர்ச்சிகரமானவை. 'காபரே' பாடல்களை அவர் மிக அழகாகப் பாடினாலும், அவை என்னவோ வாணியின் குரலுக்கு ஒத்துவராதவைபோல் தோன்றும்.
வாணியின் தோற்றத்தைப் பார்ப்பவர்கள், அவர் கலை உலகத்தில் இருப்பதாக நம்பமாட்டார்கள். அவர் அழகானவர்; திருத்தமானவர்; குடும்ப பாங்கானவர். தோற்றத்தில் பாண்டிய நாட்டுப் பெண்கள் மாதிரி ஒரு கம்பீரம் இருக்கும். அது போலவே அடக்கமும் அமைதியும் இருக்கும்.
எல்லா பாஷைகளையும் அவற்றினுடைய தொனி தவறாமல் உச்சரிக்கும் வாணியும் ஓர் ஆயுள் காலப்பாடகியே.
பெயர் பொருத்தம் பலருக்கு அமையாது. வாணிக்கு அமைந்திருக்கிறது. வாணி, உண்மையிலேயே கலைவாணிதான்.
ஆண் போன்ற குரல் படைத்த பெண்களும் இருக்கும் இப்பூமியில், வீணை ஒலிபோன்ற குரல் படைத்த வாணியை இறைவன் அதே குரலோடு நூறாண்டுகள் வாழ வைக்க வேண்டும்.
Post a Comment