By சேகர் ராஜதுரை

1. வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் நம்பும் கதை இது.

....................................................................................................................................................

2. சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட பிறந்தமேனியாய் வந்து நின்ற அவளைப் பார்த்து, கண்டதும் காதல் கொண்டு, பின்னர் கல்யாணமும் செய்து கொள்கிறான் அவன். விஷயம் தெரிந்த மன்னருக்கு வந்ததே கோபம். இருவரையும் வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.

....................................................................................................................................................

3. ரோமில் பண்டைக்காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. வாழ்க்கை வளமாக வேண்டும் என பாகான் கடவுளை வேண்டும் விழா இது. பிப்பிரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்படும் இந்த விழா ரோம் நகரில் மிகப் பிரபலம். இதை கி.பி 490 களில் போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இந்த விழாவை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், இதை ஒரு கிறிஸ்தவ விழா மூலம் செயலிழக்கச் செய்யவும் போப் தீர்மானித்தார். எனவே பிப்பிரவரி 14ம் நாளை புனித. வேலண்டைன் நாள் என அறிவித்தார் என்பது பொதுவாக நம்பப்படும் வரலாறு.

....................................................................................................................................................

4. பின்லாந்தில் வேலண்டைன்ஸ் டே மிக வித்தியாசமானது. இது காதலர் ஸ்பெஷல் தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ஸ்டேவான்பாவியா என்று அழைக்கின்றனர். இதற்கு நண்பர்கள் தினம் என்பது பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இனிப்புகள், பரிசுகள், வாழ்த்து அட்டைகள் என எல்லாம் உண்டு. வேறு வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களெல்லாம் ஒரே இடத்தில் கூடி கும்மாளமடிப்பது இதில் ஹைலைட்.

....................................................................................................................................................

5. வேலண்டைன்ஸ் தினத்தை விடுமுறை நாளாக்கி காதலர்களின் மனதில் லவ் வார்த்தவர் இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றி. 1537ல் இவர் வேலண்டைன் தினத்தை அதிகாரபூர்வ விடுமுறை நாளாக்கினார். எட்டாம் ஹென்றி மன்னன் காதல் விளையாட்டுகளில் அதீத ஆர்வம் உடையவர் என்பது தான் அதன் சீக்ரட் காரணம்.

....................................................................................................................................................

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்