கல்வியின் பயன்
கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசிய மெல்லாம், ஒருவன் தனது வாழ் நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும். அல்லது, உலகில் நல் வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது என்பதாகும்.

அதாவது, ஒவ்வொரு காரியத்துக்கும் மற்றவர்களை எதிர் பார்த்தோ, மற்றவர்கள் ஆதிக்கத்தில் இருந்தோ அல்லது தனக்கு மற்றவர்கள் வழி காட்டக்கூடிய நிலையிலோ மனிதன் இல்லாமல் சுதந்திரத்தோடும் சுய அறிவோடும் வாழத் தகுதியுடைவர்களாக வேண்டும்.

பொதுப் படிப்புக்காக ஒரு பையன் 15 வருடம் அதாவது வருடத்திற்கு ஒரு வகுப்புத் தேறினாலும் பி.ஏ. முடிக்க 15 வருடம் படிக்க வேண்டுமென்றால் இது மிகவும் அநீதியான காரியமாகும். ஏனெனில் 6ஆம் வயதில் பையன் படிக்கத் துவங்கினால் பி.ஏ., க்கு 21 வருடம் ஆகி விடுகிறது. அப்புறம் தொழில் படிப்புப் படிக்க 3,4,5 வருடங்கள் தேவைப்படுகின்றன. பிறகு அவன் அதில் அனுபவம் பெற்றவனாவதற்கு 4,5 வருடமாகும். இவற்றால், பைய்னின் நல்ல மூர்த்தண்யமான ஆயுட்காலம் வீணாகப் போகிற தல்லாமல் பெற்றோர்களுக்கும் எவ்வளவு பணம்; எவ்வளவு நாளைச் செலவிட வேண்டியிருக்கிறது. எத்தனைக் காலத்தை மாணவ வாழ்க்கையில் கழிப்பது?

காலம், பணம் செலவழித்தவனுக் கெல்லாம் உத்தியோகம் கிடைக்கின்றதா? ஆதலால் ஒரு அளவுக் கல்வி வரை பொதுக் கல்வியாக எல்லாச் சமுதாய மக்களும், படிக்கும் வயது வந்த 100 க்கு 100 பேரும் படுக்கும் படியாகச் செய்துவிட்டு, உத்தியோகத்திற்கும், தொழிலுக்கும் அவசியமான அளவுக் கல்வியை மாத்திரம் சாதி வகுப்புப் பிரிவு மக்கள் எண்ணிக்கைப்படி கொடுத்து வரலாம். சர்க்கார் பொதுப் படிப்புக்கு அல்லாமல் அதற்கு வேண்டிய மக்கள் எண்ணிக்கைக்கு அல்லாமல் மேல் படிப்பு என்பதற்கு மக்கள் வரிப் பணத்தில் ஒரு காசும் செலவு செய்யாமல் இருக்க வேண்டும்.

தேர்வுகள் பற்றிய கருத்து
பகுத்தறிவும், உடல் சக்தியும், உலக ஞானத்திறமையும், நல்ல பரம்பரையும், இயற்கை நற்கணமும் முக்கியப் பரீட்சையாக இருக்க வேண்டும். அந்தப் பரீட்டையும், உத்தியோகம் கொடுக்கப்படும் காலத்தில்தான் பரீட்சிக்கப்பட வேண்டுமே ஒழிய, பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வருடமும் பரீட்சை என்பது தேவயில்லாததாகும்.

ஆசிரியன் பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்இக் கொடுக்கும் போது கிரகணம் எப்படி உண்டாகிறது என்பதை விஞ்ஞான அறிவு கொண்டு விளக்குவான். ஆனால், அதே ஆசிரியன் வீட்டுக்குப் போய்ப் பார்த்தால் கிரகணத்தினால் தோஷம் ஏற்படாமலிருக்க மூக்கைப் பிடித்துக் கொண்டு மந்திரம் செபிப்பான். ஆசிரியர்கள் விளக்கு ஏற்றி வைப்பது இருளைப் போக்க என்று கூற வேண்டுமே யொழிய விழுந்து கும்பிட அல்ல என்று கற்பிக்க வேண்டும்.

மாணவரின் இயல்பு
கெட்டியான வஸ்துக்கள் சுலபத்தில் தீப் பற்றுவதில்லை. தீப்பற்றி விட்டால் சுலபத்தில் அணைவதில்லை; நெடு நின்று எரியும் சக்தி உள்ளவை. சீக்கிரத்தில் தீப்பிடிக்கும் வஸ்துக்களோ கெட்டியான வஸ்துக்களைப் போல் அதிக நேரம் எரிவதில்லை. சிறிது நேரத்திலேயே அணைந்து போகும். அப்படிப்பட்ட தன்மைக்குச் சமமான மாணவர்களைக் கூறலாம். எதையும் உடனே நம்பும் சுபவம் மாணவர்களுடையது. மாணவர்களின் உள்ளம் கெட்டியானதல்ல இலேசானதாக இருக்கும். அதுவும் தூய்மையானதாக இருக்கும். பட்டதும் பிடிக்கக் கூடிய தன்மை உள்ளது.

மதக்கல்வியின் இன்றியமையாமை
அறிவு வேறு, மதம் வேறு என்று பிரித்துவிட வேண்டும். அறிவை உண்டாக்கி விட்டுப் பிறகு அந்த அறிவின் மூலம் மதத்தைக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும். அப்படிக் கில்லாமல் மதத்தைப் புகுத்தி அதன் மூலம் அறிவை வளர விடாமல் செய்துவிட்டால் சுதந்திர ஞானம் எப்படி ஏற்படும்?

கல்வி பற்றி மக்களின் குறிக்கோள்
பொதுவாக நான் சொல்லுவேன். நம் மக்களுக்குக் கல்வி கற்பதில் இலட்சியம் ஒன்றுமே கிடையாது. யார் எதைப் படிக்க வேண்டும். படித்த படிப்பு எதற்குப் பயன்படும் என்கிற ஒரு யோசனையே பெற்றோர்களுக்குக் கிடையாது. படிப்பு என்பது, எதையோ படிப்பதும், படிப்பு வரக்கூடிய பிள்ளையாயிருந்தால் படித்துக் கொண்டே போவதும், படிப்பு வராவிட்டால் அன்று முதலே வேலை தேடித் திரிவதும், ஏதோ கிடைத்த வேலையை ஒப்புக் கொண்டு அதன் மூலம் வாழ்க்கை நடத்துவதும், தன் தனிப்பட்ட குடும்பம் முன்னுக்கு வரப் பார்ப்பதும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதும் ஆகிய இவை தான் கல்வியின் தன்மையாய் இருக்கின்றன.

இன்றைக்கு நாம் அனுபவிக்கும் தொல்லைகளுக்கு அதாவது மக்கள் அனுபவிக்கும் தொல்லைகளுக்குப் படித்தவர்கள் படிப்பு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆடு நரிக்குப் பயன்படிவது போல் படிக்காதவன் படித்தவனுக்குப் பயன்படுகின்றான். நன்றாகச் சொல்ல வேண்டுமானால் படித்தவன் படிக்காதவனை ஏமாற்றிச் சுரண்டுகிறான் என்பதைத் தவிரப் படிப்பு என்பது எதற்குப் பயன்படுகிறது?

கல்வித் திட்டத்தில் திருக்குறளுக்குத் தரப்பட வேண்டிய இடம்
மூட நம்பிக்கை யொழிந்து அழிந்து செம்மைப்படத் திருக்குறள் செம்மையான வழிவகுத்துக் கொடுக்கும். குறள் கருத்துக்கள் நன்கு நாடெங்கும் பரப்பப்படுதல் வேண்டும். க்லவி என்றாலே திருக்குறள் கல்வி; அறிவு என்றாலே திருக்குறள் அறிவு என்றதான் கருதப்பட வேண்டியுள்ளது. இது தவிர்த்த அறிவு விளக்க இலக்கியம் வேறுண்டா?

பொதுக் கல்வித் திட்டம்
இந்த நாட்டில் இன்று கல்வி என்னும் பேரால் பல கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து பல்கலைக் கழகம், கல்லூரி, உயர்தரப்பள்ளி என்பதாகப் பல ஆயிரக்கணக்கான பள்ளிகளை வைத்துக் கல்வி கற்பிப்பதைவிடப் பகுத்தறிவுப் பள்ளிகள் என்னும் பேரால் ஒரு சில கள்ளிகளை மாத்திரம் வைத்து நிர்வாணமான சிந்தனா சக்தி தரும் படிப்பைக் கொடுத்து மக்களை எதைப் பற்றியும், எந்தப் பற்றும் அற்ற வகையில், செல்லும்வரை சிந்தித்து முடிவுக்குவரக் கற்பிப்போமானால், நாட்டில் இன்றைய வீணாகும் செல்வம், அறிவு, ஊக்கம், நேசம் முதவியவை பெரும் அளவுக்க்உ மீதமாகி, மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, ஒழுக்கம், நேர்மை, நல்லெண்ணம், மனிதாபிமானம், அன்பு, பரசுபர உதவி முதலியவை தானாக வளர்ந்து இவைகளுக்குக் கேடான தன்மைகள் மறைந்து, எல்லா மக்களும் குறைவற்ற செல்வத்துடனும், நிறைவுள்ள ஆயுளுடனும் வாழ்வார்கள் என்பது உறுதி.