உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பன யெல்லாம் அவைகளைச் செய்கின்ற மதிக்கப்படுகின்றதேயல்லாமல், வெறும் காரியத்தைப் பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை.
பாவத்திற்குப் பயந்து திருடாதவனும், காவலுக்குப் பயந்து திருடாதவனும், உதைக்குப் பயந்து திருடாதவனும், மானத்திற்குப் பயந்து திருடாதவனும் ஒரே யோக்கியதை உடையவனாவான்.

எது குற்றம்
குற்றம் என்பது நிர்ப்பந்த மில்லாமலே, ஒரு மனிதன்தான் எதை எதைச் செய்யப் பயப்படுகிறானோ, மறுக்கிறானோ, அதை மற்றொரு மனிதன் செய்தால்தான் குற்றம்.

ஒழுக்கம் கெடுவதற்கு காரணம்
ஒழுக்கக் குறைவாய் ஒருவன் நடக்க வேண்டுமானால், அதனால் அவனுக்கு, ஒழுக்கமாய் நடப்பதன் மூலம் கிடைக்காத ஏதாவது லாபமோ திருப்தியோ ஆசைபூர்த்தியோ ஏற்பட வேண்டும். 

தன்னிலும் மேலாகவோ தன்னிடமிருப்பதைவிட அதிகமாகக் கொண்டோ வேறொருவன் இருக்கிறான் அனுபவிக்கிறான் என்கின்ற உணர்ச்சி ஏற்படும் போதுதான் அதிருப்தியும் மனக்குறைவும் ஏற்படும். அதை நிவர்த்தித்துக் கொள்வதற்குத்தான் எந்த மனிதனும் ஒழுக்கக் குறைவாய் நியாய விரோதமாய்க் கட்டுத்திட்டத்துக்கு மீறி நடக்க வேண்டயவனாகலாம். புதிய உலகில் தனிப்பட்டவர் தேவைக்கும் தனிப்பட்டவர் மனக் குறைவுக்கும் ஏங்கித் திரியும் ஆசைக்கும் இடமே இருக்காது.

ஒழுங்கு, கடவுள், மதம், சாத்திரம்
ஒழுங்காக ஒரு முறை இருந்தால் அரசாங்கம் வேண்டாம்; சாத்திரம் வேண்டாம்; கடவுளும் வேண்டாம். ஒழுங்கிற்கு விரோதமான இடங்களுக்குத்தான் இயற்கைக்கு மாறான இடங்குளுக்குத்தான் இவைகள் எல்லாம் தேவை. அதனாலேதான் சற்று ஒழுங்கு இருக்கிற இடத்திலே அரசன் இருப்பதில்லை; மற்றும் மதம், சாத்திரம் இவைகள் எல்லாம் இருப்பதில்லை.

ஒழுக்கத்திற்கும் மானத்திற்கும் உள்ள தொடர்பு
ஒழுக்கக்கேடு என்பது மானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒழுக்க முள்ளவேன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான்.
எந்தக் காரியங்களை ஒரு மனிதன்; தான் அப்படிச் செய்ய நினைத்ததும், மற்றவர்கள் அறியாதபடி செய்த்தும், வேறுபல நிர்ப்பந்தங்களால், இச்சைக்கு விரோதமாய்ச் செய்ய முடியாமல் இருந்ததுமாய் இருக்கின்றனவோ, அந்தக் காரியங்களை மற்றவர்கள் செய்தால் அது எப்படுப்பட்ட காரியமானாலும் ஒருக்காலமும் குற்றமாகாது.

பக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாது ஒருவன் இருந்தால் அது பிறரையும் பாதிக்கும். ஒழுக்கம் இல்லாதவனால் அயலார்க்குத் தொல்லை ஏற்படும். எனவே சமுயதாய வாழ்க்கையில் ஒழுக்கம் பக்தியைவிட முதன்மையானது; இன்றியமையாதது.