By சேகர் ராஜதுரை
நேர்முகத் தேர்வு பல
இதுவரைக்கும் முடித்துவிட்டேன்
வேலை இன்னும் கிடைக்கவில்லை

எனக்குத் திறமை யுண்டு -  இது
எனக்கும்
என்னைத் தெரிந்த
எல்லோருக்கும் தெரியும்
என்ன செய்வது.....
என்னைத் தெரிந்த எவருக்கும்
எனக்கு வேலை தரும் வசதியில்லை

ஆரம்பத்தில்.....
எத்தனையோ  வேலை வந்தும்
வேண்டாமென்று விட்டுவிட்டேன்
கொள்கைகள் தடுத்ததனால்

குறித்த துறையினிலே
பிடித்த வேலை வேண்டும்...
அதனால்   - என்
கால் பிடித்த வேலையெல்லாம்
அடித்துத் துரத்தி விட்டேன்
 
ஆனால் இப்போது.......
எந்த வேலையேனும்
கொடுத்தால் போதுமென்று
எத்தனையோ கால் பிடித்தும்
அடிக்காமல் துரத்தப்பட்டேன்

வங்கி வேலைக்கான
நேர்முகப் பரீட்சையது

"அனுபவம் ஏதுமுண்டா?"  என்றால்
"சொந்தமாய் ஒரு வங்கி
என்னிடம் இல்லையையா
அனுபவம் நான் பெறுவதற்கு"  என்றேன்

ஒரு வெளிநாடு வேலைக்கு
கொழும்பிலே தேர்வு.....

"இதற்கு முன்னர் நீங்கள்
வெளிநாடு சென்றதுண்டா?"  என்றால்
"கொழும்பிற்கு வந்தது நான்
இதுதான் முதல் தடவை" என்றேன்

இவற்றை யெல்லாம்
விட்டு விட்டேன்
ஒன்று மட்டும் விளங்கவில்லை

திறமை யெல்லாம் அடுத்த படி
அனுபவம்தான் முதல் படி    ..... என்றால்
அனுபவம் பெறுவதற்கு
என்ன நான் செய்யவேண்டும்

அதற்கும் அனுபவம் வேண்டுமோ.....?
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்